‘தியாக தீபம்’திலீபன் நினைவு ஊர்தியின் நல்லூர் நோக்கிய பவனி

165 0

‘தியாக தீபம்’ திலீபனின் 36வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான திலீபன் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினது இளைஞர் அணியின் அம்பாறை மாவட்டத் தலைவர் துசானந்தன் ஏற்பாட்டில் தியாகத் தீபம் திலீபன் நினைவு ஊர்தியின் யாழ்ப்பாணம், நல்லூரை நோக்கிய பயணத்தின் முதல் நாளான நேற்று ஊர்தியானது அம்பாறையின் பொத்துவில் முதல் பெரிய நீலாவணை வரையான பிரதேசங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (15) பவனியாக சென்றது.

இதன்போது பொதுமக்கள் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று மாலை அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு திரௌபதை ஆலயத்தை சென்றடைந்ததன் பின்னர், மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு அம்பாறை மாவட்ட நேற்றைய ஊர்திப் பவனி நிறைவடைந்தது.

இதன்போது குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி காண்டீபன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது, பௌத்த சிங்களமயமாக்கலை நிறுத்துவது போன்ற தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஊர்திப் பவனி இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், பொத்துவில் பகுதியில் பயணத்தை ஆரம்பித்த இந்நினைவு ஊர்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களின் ஊடாகவும் பயணித்து, இறுதியில் யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.