ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறுபவர்கள் இலகுவில் தப்பித்துக்கொள்ள முடியாது

143 0

ஊழல் எதிர்ப்பு  சட்டத்தை மீறுபவர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ள முடியாமல் கடுமையான தண்டனைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அதனால் ஊழல் அற்ற நாட்டை ஏற்படுத்த இந்த சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

2023,09,15ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும்  ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலஞ்சம், ஊழல் மோசடியற்ற நாடொன்றை ஏற்படுத்துவதாக இருந்தால் இன்று முதல அமுலுக்கு வரும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை யதார்த்தமாக்கிக்கொள்ளவேண்டும்.

இந்த சட்ட வரைப்புக்குள் அதற்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஊழல் எதிர்ப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அத்துடன் இந்த ஊழல் எதிர்ப்பு சட்டம் நாட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக எதிர்பாத்திருந்த கனவாகும். அதனால் இந்த சட்டத்தை முறையாக செயற்படுத்தி மக்களின் கனவை நனவாக்க அனைத்து தரப்பினரும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் அரச துறைகளில் குறிப்பாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அரச வளங்களை துஷ்பிரயேகம் செய்தல் ஊழல் மோசடி மற்றும் இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நீண்டதொரு கருத்தாடல் இருந்து வருகிறது.

அனைத்து தேர்தல்களின்போதும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்திருப்பது, இந்த இலஞ்ச ஊழல் மோசடிகளை ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலாகும்.

என்றாலும்  மக்கள் திருப்தியடையும் வகையில் இந்த இலஞ்ச ஊழலை தடுப்பதற்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்துக்கும் முடியுமாகவில்லை.

அதற்கு தேவையான சட்ட வரைபும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை. அதேபோன்று இதனை செயற்படுத்தும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதன் தேவைப்பாடு குறித்து கண்டுகொள்ளவில்லை.

அதனால் அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் நாங்கள் கைச்சாத்திட்ட நாடாக இருந்தாலும் அதற்கு ஏற்புடைய சட்ட திட்டங்களை நாங்கள் அமைக்கவி்ல்லை.

மேலும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் இதனை செயற்படுத்தும் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகவே 21ஆம் அரசியலமைப்பு திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை  ஆரம்பித்தோம். அதற்குள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் உள்ளடக்கப்படுகிறது.

என்றாலும் அதன் செயற்பாடுகள் மற்றும் சுயாதீனத்தன்மை தொடர்பாக நாட்டு மக்கள் திருப்தியடையவில்லை. அதனால் நாங்கள் நிதி, நிர்வாக அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு இலஞ்ச  ஊழல் ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.  அதன் பிரகாரமே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அனுமதித்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இருந்த சட்டத்திலும் பார்க்க நிறுவனத்தின் சுயாதீனத்தன்மை இதன் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தில் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அதனால் நாங்கள் புதிய சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டோம்.. இந்த சட்டமும் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. ஊழல் எதிர்ப்பு  சட்டத்தை மீறுபவர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ள முடியாமல் கடுமையான தண்டனைகள் இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றார்.