8 மாத காலத்துக்குள் பொருளாதாரம் 11.5 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது

100 0

வெளிநாட்டு கடன்கள் திருப்பி செலுத்தாமலே எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஆகவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. நிறைவடைந்த எட்டுமாத காலத்துக்குள் பொருளாதாரம் 11.5 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹெவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மீதான உரையின் போது ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை உறுதிப்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் அரசாங்கம் இதுவரை செயற்படுத்தவில்லை.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கையினால் தேசிய தொழிற்றுறை பாரிய நெருக்கடிக்குள்ளாகி ஏற்றுமதி பொருளாதாரம் வீழ்ச்சிடைந்துள்ளது.

நிறைவடைந்த 8 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் ஏற்றுமதி பொருளாதாரம் 10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.அத்துடன் இறக்குமதி செலவு 18 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.இறக்குமதி செலவு குறைவடைந்துள்ளதை சாதகமான நிலையாக கருத முடியாது.

நாட்டின் பிரதான ஏற்றுமதி பொருளாதார தொழிற்றுறையாக காணப்படும் ஆடை உற்பத்தி தொழிற்றுறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த 8 மாத காலத்துக்குள் ஆடை ஏற்றுமதி தொழிற்றுறை வருமானம் 18 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

மறுபுறம் வரி அதிகரிப்பு,மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளால் தேசிய மட்டத்திலான சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளுடனான ஏற்றுமதி வருமானம் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் தேசிய மற்றும் பூகோள மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றது.இருப்பினும் 2021 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதத்தால் உயர்வடைந்தது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் காலத்தில் பொருளாதாரம் முன்னேற்றமடையவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம் என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பொருளாதாரம் 11.5 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது.ஆகவே ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகியுள்ளது.

எரிபொருள்,எரிவாயு ஆகிய அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கப் பெறுகிறது.ஆகவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவது முற்றிலும் தவறானது.

2022.04 காலப்பகுதியில் இருந்து வெளிநாட்டு கடன்கள் அதற்கான வட்டி செலுத்தப்படுவதில்லை.கடன் செலுத்தாதால் ஒவ்வொரு மாதமும் மீதமாகும் நிதியை கொண்டு எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

எதிர்காலத்தில் கூட வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு நெருக்கடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.