காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து சமுத்திரங்களைப் பாதுகாக்குமாறு கோரி, ஐநா நீதிமன்றத்தில் 9 சிறிய நாடுகள் வழக்குத் தொடுத்துள்ளன.
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரிலுள்ள, கடல் சட்டங்களுக்கான சர்வதேச தீர்ப்பாயம் எனும் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (11) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
சமுத்திரங்களினால் அகத்துறிஞ்சப்படும் காபனீரொட்சைட் வெளியேற்றங்களை சூழல் மாசாக கருத வேண்டும் எனக் கோரியும், அத்தகைய மாசு உமிழ்வுகளுக்குப் பொறுப்பான நாடுகள் அதைத் தடுப்பற்கு செய்ய வேண்டிய விடயங்களைத் தீர்மானிக்கக் கோரியும் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
9 சிறிய நாடுகள்
இந்நிலையில், காலநிலை மாற்றம் சர்வதேச சட்டத்துக்கான சிறிய தீவு நாடுளின் ஆணைக்குழு (COSIS) எனும் அமைப்பினால் இந்த வழக்கு 2022 டிசெம்பரில் தாக்கல் செய்யப்பட்டது.
அன்டிகுவா அன்ட் பார்புடா, துவாலு, நியுவே, வனுவாட்டு, செயின்ற் லூசியா, செயின்ற் வின்சென்ட் அன்ட் கிரனடைன்ஸ், பலாவ், செயின்ற் கிட்ஸ் அன்ட் நீவிஸ், பஹாமஸ் ஆகிய 9 தீவுக்கூட்ட நாடுகள் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றன. 2001 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச காலநிலை மாநாட்டின்போது இவ்வமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
காலநிலை மாற்றம், சமுத்திர நீர்மட்டம் அதிகரிப்பு ஆகியவற்றினால் அதிகம் பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளாக மேற்படி நாடுகள் உள்ளன. காபனீரொட்சைட் உமிழ்வுகளில் 25 சதவீதத்தை சமுத்திரங்கள் உறிஞ்சுவதுடன், அந்த உமிழ்வுகளின் விளைவாக ஏற்படும் வெப்பத்தல் 90 சதவீதத்தையும் உறிஞ்சுகின்றன. பூமியின் ஒட்சிசனில் 50 சதவீததையும் சமுத்திரங்கள் உற்பத்தி செய்கின்றன.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான புரத உணவுக்கான முக்கிய ஆதாரமாகவும் சமுத்திரங்கள் விளங்குகின்றன. காபன் உமிழ்வுகள் அதிகரிப்பது, கடல்நீரை வெப்பமடையச் செய்வதுடன், அதை அமிலத்தன்மையானதாக மாற்றும் இது. கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட சாசனம் ஆனது கடல்சார் சுற்றாடல் மாசு என்பதை, கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மனிதர்களால் நேரடியாகவோ, மறைமுகமாகவே கடலுக்கு விடப்படும் பொருட்கள் அல்லது சக்தி என அறிமுகப்படுத்துகிறது. ஆனால், காபன் உமிழ்வுகள் அத்தகைய மாசு ஆகுமா என்பதை அது தெரிவிக்கவில்லை. இந்நலையில் காபன் உமிழ்வுகளையும் சமுத்திர மாசு என கருத வேண்டும் என வழக்குத்தொடுநர்கள் கோரியுள்ளனர்.
ஐ.நா கடல் சட்ட சாசனம்
ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட சாசனம் (UNCLOS) ஆனது 1982 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையாகும். கடல்சார் வணிகம், சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற விடயங்கள், உலகின் கடல்களில் நாடுகள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் இந்த சாசனம் வரையறுக்கிறது. இலங்கை உட்பட 157 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. 1994 ஆம் ஆண்டு முதல் இச்சாசனம் அமுலுக்கு வந்துள்ளது.
கடல் சட்டங்களுக்கான சர்வதேச தீர்ப்பாயம்
கடல் சட்டங்களுக்கான சர்வதேச தீர்ப்பாயம் (ITLOS) ஆனது, 1982 ஆம் ஆண்டில் ஜமெய்க்காவில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. ஜேர்மனியின் ஹம்பர்க் நகரைத் தலைமையமாகக் கொண்ட இத்தீர்ப்பாயம் 1994 முதல் இயங்குகிறது. 21 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.