எதிர்க்கட்சிகளின் வங்குராேத்து நிலை வெளிப்பட்டுள்ளது

58 0

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வங்குராேத்து நிலை வெளிப்பட்டுள்ளது. அத்துடன் வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் குறைபாடுகள் ஏற்படலாம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வங்குராேத்து நிலை வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக சில மருந்து வகைகளை குறிப்பிட்டு, அது தரம் குறைந்ததாகவும் அதனை பயன்படுத்தியதன் மூலம் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி இவ்வாறான பல பொய் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சினர் முன்வைத்திருந்தபோதும் அதனை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இறக்குமதி செய்யப்படும் சில மருந்து பொருட்கள் சில சந்தர்ப்பங்களில் ஒவ்வாமை காரணமாக ஒருசிலருக்கு சிக்கல் நிலை ஏற்படுகிறது.

இது உலகில் அனைத்து நாடுகளிலும் இடம்பெறும் விடயமாகும். குறிப்பாக பராேபொபோல் மருந்து காரணமாக  குழந்தை ஒன்று உயிரிழந்ததாக பொய் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை.

இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் சில சந்தர்ப்பங்களில் சிக்கல் நிலையை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டதுடன் அந்த தொகையை ஒதுக்கிவைப்போம். அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகை எமது அரசாங்க காலத்திலும் இருக்கிறது.

இது உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறும் விடயமாகும். என்றாலும்  எதிர்க்கட்சி தங்களின் குறுகிய அரசியல் நோக்கில் உணர்வு பூர்வமான இந்த தலைப்பை எடுத்துக்கொண்டு நாட்டின் சுகாதார துறை தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி, அரசாங்கத்தை பலவீனப்படுத்த  முயற்சித்து வந்தது. என்றாலும் அவர்களுக்கு அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்துடன் நாட்டில் அதிகமான வைத்தியசாலைகளில் சில  மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. அதேபோன்று வைத்திய உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.

அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறாேம். வங்குராேத்து நிலையில் இருக்கும் இந்த நாட்டில்  இவ்வாறான குறைபாடுகள் ஏற்படலாம். அதனால் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்கு நாடு என்றவகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் எமக்கு அரசியல் செய்ய முடியும் என்றார்.