சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
2017-2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 16-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் புத்தகத்தை படிப்பதற்கு வசதியாக அடுத்த நாள் (17-ந் தேதி) விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து வந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும்.
எனவே, 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
அதன்பிறகு, பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று, பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் குறித்து பேசுகிறார்கள். அதற்கு, நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளிக்கிறார்.
நாளையும் (21-ந் தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. 23-ந் தேதி (வியாழக்கிழமை) 2017-2018-ம் ஆண்டு செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் அவையில் வைக்கப்படும். மேலும், 2016-2017-ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டும் அவைக்கு அளிக்கப்படும். அந்த துணை பட்ஜெட்டில் உள்ள துணை மானியக் கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும்.
2017-2018-ம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கு நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும். அதன்பிறகு, பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடர்ந்து நடைபெறும். இறுதி நாளான 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு, அன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலுரை இடம் பெறும். மேலும், அன்று சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
சபாநாயகர் ப.தனபாலுக்கு எதிராக தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், சட்டசபையில் இந்த கூட்டத்தொடரிலேயே எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. வரும் 23-ந் தேதி அது எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
மேலும், தி.மு.க. உறுப்பினர்கள் மீது அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் (பெரம்பூர் தொகுதி) புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க. உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, அது தொடர்பான முடிவும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.