கொக்குத்தொடுவாயில் விடுதலைபுலிகளின் தகட்டிலக்கம் மீட்பு?

142 0

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வுபணிகளின் போது விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவியபோது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வு பணிகள்; நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த அகழ்வாய்வுகள் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி, தடையவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், அகழ்வுப் பணி இடம்பெறும்போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த அகழ்வுப்பணிகளில் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் (இ) எழுத்துடைய இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

இந்த விடயம் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவிய போதும் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவிய போதும் முறையாக பதில்கள் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குறித்த நான்காம் நாள் அகழ்வாய்வுகளின்போது ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்புக்கு அனுமதி மறுத்தமை மற்றும் அகழ்வாய்வுகள் தொடர்பான முடிவுகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மறுத்தமை அகழ்வுப் பணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதேவேளை இன்று அகழ்வுப் பணிகள் எதுவும் இடம்பெறாதெனவும், நாளை (11) திங்கட்கிழமையேஐந்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.