தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே முறைகேடான விடயமாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (09.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல் 04 வெளியிட்ட தகவலானது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.
இன்று தென்னிலங்கையில் உள்ளவர்கள் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கின்றனர்.
நாங்களும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தியே இவ்விடயமானது தற்போது பேசுபொருளாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி காலத்திலே தமிழ் மக்களினை படுகொலை செய்ததுடன் மனித உரிமை மீறல்கள்ளையும் மேற்கொண்டிருந்தனர்.இது தொடர்பாக ஐநா சபை கண்டனம் தெரிவித்ததுடன் இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர். என தெரிவித்துள்ளார்.