ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர்

94 0

சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘மினியன்ஸ்: ரைஸ் ஆப் க்ரு’ படத்தில் தொடங்கி ‘இன்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ வரை பலதரப்பட்ட படங்களையும் பார்த்துள்ளார்.

இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்சென்ட் க்ரோன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு 715 படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. அதனை சாக்ஸ்வோப் தற்போது முறியடித்துள்ளார். இந்த சாதனை படைப்பதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதாவது ஒவ்வொரு படங்கள் பார்க்கும் போதும், மது குடித்திருக்க கூடாது, சாப்பிடக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை அவர் பின்பற்றி வந்துள்ளார்.

இதனை தியேட்டர் ஊழியர்களும் கண்காணித்து உறுதி செய்துள்ளனர். ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 6.45 மணி முதல் மதியம் 2.45 வரை வேலைக்கு செல்லும் சாக்ஸ்வோப் அதன்பிறகு தியேட்டருக்கு சென்று 3 படங்கள் வரை பார்த்துள்ளார். வார இறுதி நாட்களில் கூடுதல் காட்சிகளையும் பார்த்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.