ஜி20 கூட்டுப் போர்ப் பிரகடனம் குறித்து ‘பெருமைப்பட ஒன்றுமில்லை’ என்று உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டுப் பிரகடனத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவைக் குறிப்பிடாததற்காக பிரகடன உரையை விமர்சித்தது.இதுதொடர்பாக, “ஜி20 கூட்டத்தில் உக்ரைன் தரப்பின் பங்கேற்பு, பங்கேற்பாளர்கள் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள அனுமதித்திருக்கும் என்பது தெளிவாகிறது” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
முன்னதாக, புதுடெல்லியில் ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் 37 பக்கம் கொண்ட டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் எதிர்காலத்தை பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் நடைபெறும் போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது.
அந்த பிரகடனத்தில், “தனது படைகளை பயன்படுத்தி மற்ற நாட்டின் எல்லைகளைப் பிடிக்கக் கூடாது. நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும். ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் அமைதியான, நட்புரீதியான மற்றும் சிறந்த அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். இது போருக்கான காலம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.