புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழு விவகாரத்தில் ஆளுநரும், தமிழக அரசும் மோதலைக் கைவிட்டு மாணவர்களின் நலன்கருதி இணைந்து செயல்படவேண்டும் என்று அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவ ர்நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களை தமிழக ஆளுநர் தன்னிச்சையாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது துரதிர்ஷ்டமானது.துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இணைக்க வேண்டும் என்ற நோக்கம் வரவேற்கத்தக்கது. எனினும், அதை தன்னிச்சையாக ஆளுநர் மேற்கொள்ள இயலாது. சார்ந்த பல்கலை.களின் விதிகளின்படியே தேடல் குழுக்களை அமைக்க வேண்டும். மேலும், அதை அரசிதழ் மூலம் முறையாக அறிவிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆளுநர் மதிப்பதுடன், தேடல் குழு அமைப்பது தொடர்பான மரபுகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். மேலும், பல்கலை. வேந்தர் என்ற முறையில் தனது சுயவிருப்பத்தின்படி துணைவேந்தருக்கான தேடல் குழுவை அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மாநில அரசு அதற்கான அரசாணையை வெளியிட்ட பின்னரே தேடல் குழு முறைப்படி செயல்படத் தொடங்கும்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான இந்த முரண்பாடு புதிய துணைவேந்தர் நியமனத்தை மேலும் தாமதமாக்கும். இது பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மிகவும் பாதிக்கும்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை கண்டறியும் தேடல் குழுக்களில் தனது பிரதிநிதியை இடம்பெறச் செய்ய வேண்டுமென யுஜிசிபுதிய விதிமுறைகளில் நிபந்தனை விதித்துள்ளது. இது அந்தந்த மாநிலத்தில் உள்ள பாரபட்சமான அல்லது அரசியல் செல்வாக்கை தவிர்க்கும் என்பதால் வரவேற்கத்தக்கது.
ஆனால், இதை ஆளுநரோ, அரசோ தன்னிச்சையாகச் செய்யஇயலாது. அதனால் துணைவேந்தர் தேடல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் விதிகளிலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான பணிகளை முன்னெடுக்க ஆளுநரும், யுஜிசியும் மாநில அரசைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
உயர்கல்வி தொடர்பான பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. உயர்கல்விநிறுவனங்களுக்கு இருதரப்பினரும் முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கை, யுஜிசி அறிவுறுத்தல்களை அமல்படுத்த வேண்டுமென ஆளுநர் தரப்புகூறும்போது, யுஜிசி, ஏஐசிடிஇ உத்தரவை அமல்படுத்த தேவையில்லை என்று அரசு தரப்பு கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இதை பல்கலை. துணைவேந்தர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது வேதனையாக உள்ளது.துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். எனவே,மாநிலத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வியின் நலனுக்காக பல்கலை. வேந்தரும் (ஆளுநர்), இணைவேந்தரும் (உயர்கல்வி அமைச்சர்) முரணான போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லூரி அமைப்புகள் கண்டனம்: இதற்கிடையே, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு,பல்கலை. ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் அமைப்புகளும் ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில், ‘‘ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டப்பேரவையின் அதிகாரத்தை கையகப்படுத்துவதற்குச் சமமானதாகும். எனவே, ஆளுநர் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளன.