அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்…..
தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி முழுவதிலும் மாநில மட்டத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளின் நிறைவுநிலைப்போட்டிகள் கடந்த 18.03.2017 சனிக்கிமை கற்றிங்கன் நகரில் சிறப்பாக நடைபெற்றன.
விழா மங்கல விளக்கேற்றலுடன் 09:00 மணிக்கு ஆரம்பமாகியது. விழாவில் பல சிறப்புவிருந்தினர்களுடன் இசைத்துறையில் பல்வகையான பட்டங்களுக்கு உரித்தாளியான மதிப்புக்குரிய மதுரக்குரலோன் திரு.S கண்ணன் அவர்களும், திரு தேவகுருபரன் அவர்களும், தமது குடும்பத்தினருடன் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். மதுரக்குரலோன் திரு.கண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றும்போது. தமிழ்க் கல்விக் கழகத்தின் இப்புதிய முயற்சியைப் பாராட்டியதுடன் இந்நிகழ்வு ஒரு இறுதிப்போட்டியல்ல இன்னும் பல ஆண்டுகள் வளரும் போட்டியென்று வாழ்த்தினார்.
காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மி,கோலாட்டம், விடுதலை நடனம், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற நிகழ்வுகளில் 50 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டிகளையும் மூன்று துறைசார் வல்லுஞர்கள் முதன்மை நடுவம் செய்தபோதிலும். விழாவில் கலந்துகொண்ட பல்வகையான தரப்பிலிருந்தும் ஏழுபேர்கொண்ட விசேடகணிப்புக்குழு மேலதிகமாகத் தயாரிக்கப்பட்டு இரண்டாம்நிலை நடுவமும் செய்யப்பட்டது தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்கும் பங்கேற்புத் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் வெற்றிப்பட்டியும் கழுத்தில் அணியப்பட்டு விசேடமாக மதிப்பளிக்கப்பட்டனர். இறுதிப் போட்டிகளில் முதல் மூன்று நிலைகளை அடைந்துள்ள போட்டியாளர்களை ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழாவின் ஐந்து அரங்குகளிலும் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.