யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் நீதி கிடைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
மரணிக்கும் தருவாயில் இருக்கும் உயிரைக் கூட மருத்துவத்தால் மேலும் சில வருடங்களுக்கு வாழ வைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்தக் காலத்தில், அதே மருத்துவத்தால் ஒரு பாலகியின் கை இழக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தால் இன்று மருத்துவமனைகளை நாட மக்கள் அச்சம் கொள்கின்றனர். மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா என்ற அச்சத்தையும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அதிசிறந்த வைத்திய நிபுணர்களை கொண்ட எமது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை எத்தனையோ உயிர்களை இன்றும் வாழவைத்து வருகிறது. அதேசமயம் ஒரு சிலரின் அசண்டையீனங்களால் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தி வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியையும் பதித்துவிடுகிறது. அவ்வாறான ஒரு சம்பவம்தான் இச்சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட துயரமான நிகழ்வு.
கடவுளுக்கும் மேலாக நாம் வைத்தியர்களையும் சுகாதார தரப்பினரையும் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தும் காட்டியுள்ளனர். உதாரணமாக, கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளை மறந்துவிட முடியாது. ஆனால், அதே சுகாதாரத்துறையில் ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதான நம்பிக்கையையும் ஒரே நொடியில் சிதைத்துவிடுகிறது.
பல எதிர்கால கனவுகளோடு தனது வாழ்வை வாழக்கூட ஆரம்பிக்காத அந்த சிறுமியாலும்,-சிறுமியின் குடும்பத்தாலும் நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி கையினை இழந்ததை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
அண்மைக்காலமாக இலங்கையின் மருத்துவத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களை இலகுவில் கடந்துவிட முடியாது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேபோன்று நடந்தது என்னவென்று இதுவரை உணர முடியாத இந்த பாலகிக்கும் பக்கச்சார்பற்ற நீதி கிடைக்க சுகாதார அமைச்சு மற்றும் உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.