பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தை ஏன் இதுவரை சான்றுரைப்படுத்தவில்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேள்வியெழுப்பினார்.
உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தில் ஒருசில விடயங்களை திருத்தம் செய்ய வேண்டும். ஆகவே திருத்தங்களும் சட்டமூலம் வெகுவிரைவில் சான்றுரைப்படுத்தப்படும் என சபாநாயகர் பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி உரையாற்றியதாவது,
உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அந்த சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை அளிக்கவில்லை. உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளன. ஏன் மத்திய வங்கி சட்டமூலம் இதுவரை சான்றுரைப்படுத்தவில்லை என சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பினார்.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வினவிய பின்னர், பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலத்தில் ஒருசில விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆகவே, திருத்தங்களுடன் சட்டமூலம் வெகுவிரைவில் சான்றுரைப்படுத்தப்படும் என்றார்.
மீண்டும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி புதிய மத்திய வங்கி சட்டமூலம் சான்றுரைப்படுத்தப்படாமல் இருப்பதால் மத்திய வங்கி தனது விருப்பத்துக்கு அமைய நாணயத்தை அச்சிடுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. ஆகவே நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு விரைவாக சான்றுரைப்படுத்துங்கள் என்றார்.