சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சனல் 4இன் வீடியோ குறித்து வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சனல் 4 வெளியிட்ட முன்னைய வீடியோ போன்று பொய்களை கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட நபர்கள் சிலர் எனக்கு எதிராக அரசியல் நோக்கங்களை கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவுவதற்காக அனைத்தையும் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
2019 ஏப்பிரல் 21ம் திகதி இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதல்கள் நான் நவம்பர் 2019 தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் சூழ்நிலையை நோக்கமாக கொண்டவை என்பதே சனல் 4 இன் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் முக்கிய குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.
ஐரோப்பாவில் அரசியல் புகலிடம் கோரியுள்ள ஹன்சீர் ஆசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ள விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த நபர் தான் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேiயை (இவர் தனது கடந்த காலங்களில் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற தனது பணியால் நன்கு அறியப்பட்டவர்)குண்டுதாரிகளில் முக்கியமானவரான ஜஹ்ரானிற்கும் அவரது சகோதாரர் ஜைனீமௌலவிக்கும் 2018 இல் அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சாலே எனது விசுவாசி என ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,எனினும் அவர் பல ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றிய இராணுவ அதிகாரி அனைத்து இராணுவ அதிகாரிகளும் நாட்டிற்கு விசுவாசமானவர்கள் தனிநபர்களுக்கில்லை.
நான் முன்னாள் இராணுவ அதிகாரியே நானும் பல அரசாங்கங்களின் கீழ் பணியாற்றியுள்ளேன்.
2015 இல் பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வரை அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை.
இராணுவ புலனாய்வு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டு 2016 முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் தூதரக அதிகாரியாக பணியாற்றியதாக சுரேஸ்சாலே சனல் 4 க்கு தெரிவித்துள்ளதுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட காலத்தில் தான் இலங்கையில் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2019 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சுரேஸ் சாலே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்றலில் ஈடுபட்டிருந்தார்.
அவ்வேளை அவர் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் காணப்படவில்லை.
2016 இல் அவர் இராணுவபுலனாய்வு பிரிவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் மீண்டும் அதில் பணியாற்றவில்லை.
நான் மீண்டும் ஜனாதிபதியான பின்னரே அவர் மீண்டும் அரசாங்கத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக 2019 டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.
ஆகவே சுரேஸ்சாலே 2018 இல் குண்டுதாரிகளை சந்தித்தமை குறித்த தகவல்கள் புனையப்பட்டவையே
இராணுவ புலனாய்வு பிரிவினர் தற்கொலைகுண்டுதாரிகளுடன் தொடர்பிலிருந்தனர் என்ற தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக 2018 நவம்பர் 30 திகதி வவுணதீவு சம்பவத்தையும் ( இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆயுதங்கள் களவாடப்பட்டன)2019 ஜனவரி 16 ; திகதி வனாத்தவில்லில் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதையும் பொலிஸார் விசாரணை செய்ய ஆரம்பித்தவேளை அந்த விசாரணைகளை இராணுவ புலனாய்வு பிரிவினர் குழப்பினர் என ஆவணப்படம் குற்றம்சாட்டுகின்றது.
2015 முதல் 2019 வரை அவ்வேளை ஆட்சியிலிருந்த அரசாங்கம் புலனாய்வு பிரிவினரை துன்புறுத்தியது என்பதையும் பலர் சிறையில் பொலிஸ்தடுப்புக்காவலில் வாடினர் என்பதையும் அனைத்து இலங்கையர்களும் அறிவார்கள்.
இதன் காரணமாக 2015 முதல் 2019 வரை பொலிஸாரின் விசாரணைகளை இராணுவபுலனாய்வு பிரிவினர் குழப்பினர் என தெரிவிப்பது அர்த்தமற்ற விடயம்
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு 2015 முதல் 2019 வரை ஆட்சியிலிருந்த அரசாங்கம் முஸ்லீம் தீவிரவாதத்தின் எழுச்சியை புறக்கணித்தது என தெளிவாக தெரிவித்துள்ளது.
2016 நவம்பர் 18 ம் திகதி 32 இலங்கையர்கள் ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியாவிற்கு சென்றுள்ளனர் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத போதனைக்ககா வெளிநாட்டு இஸ்லாமிய போதகர்கள் இலங்கை வந்துள்ளனர் இவை அனைத்தும் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன.
2018 மார்ச் 25 முதல் 28 வரை தற்கொலை குண்டுதாரிகளின் சந்திப்பொன்று லெவெலையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. பின்னர் ஏப்பிரல் மே மாதங்களில் நுவரேலியாவில் உள்ள விடுதியில் அவர்கள் சந்தித்துள்ளனர் – இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – ஆனால் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை.
2018 ஆகஸ்ட் 27 ம் திகதி காத்தான்குடியில் வெடிபொருட்களை பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டிருந்தவேளை ஜஹ்ரானின் சகோதரர் காயமடைந்துள்ளார்,மேலே குறிப்பிடப்பட்ட வவுணதீவு வனாத்தவில்லு சம்பவங்களிற்கு அப்பால் 2018 டிசம்பரின் பிற்பகுதியில் மாவனல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன..
இந்த முன்கூட்டிய சம்பவங்கள் ஏதாவது ஒன்று குறித்து உரிய விசாரணைகள் இடம்பெற்றிருந்தாலும் பயங்கரவாதிகளை கைதுசெய்து தற்கொலை குண்டுதாக்குதல்களை தடுத்திருக்கமுடியும் என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளிற்கு பொலிஸாரே பொறுப்பாகயிருந்தார்கள் – இராணுவ புலனாய்வு பிரிவினர் இல்லை.
மேலும்இந்தகாலப்பகுதியில் நான் அதிகாரத்தில் இருக்கவில்லை.
2019 இல் மீண்டும் ஜனாதிபதியாகும் வரை புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் படையினர் பலர் போல நானும் நீதிமன்றம் நீதிமன்றமாக சென்றுகொண்டிருந்தேன்,அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒடுக்குமுறையே இதற்கு காரணம்.