கொட்டகலை பத்தனை சந்தி கட்டிடத்தை ஏலத்தில் விட நுவரெலியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

73 0

கொட்டகலை பத்தனை சந்தியில் காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள  ஐந்து கடையறைகள் கொண்ட  கட்டிடத்தை ஏலத்தில் விடுவதற்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் கொட்டகலை பிரதேச சபைக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை கடந்த 4 ஆம் திகதி திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது. 

சட்டவிரோதமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்தை கொட்டகலை பிரதேச சபை தனக்குரியதென  எவ்வாறு ஏலத்தில் விடலாம் என்ற கேள்வியை முன்வைத்து மேற்படி பிரதேச சபையின் முன்னாள் ஜே.வி.பி  உறுப்பினர் பாலசுப்ரமணியம் ராஜா நுவரெலியா மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக  5 ஆம் திகதி இடம்பெறவிருந்த இக்கடைத்தொகுதிகளின் ஏலம் விடும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

இது குறித்து மனுதாரர் சார்பாக ஆஜரான  சட்டத்தரணி சுந்தரலிங்கம் சுரேஷ் கூறுகையில், மேற்படி கட்டிடம் கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தானது என நிரூபிக்கும் எந்த ஆவணங்களையும் சபை கொண்டிருக்கவில்லை.

இது பிரதேச சபைக்குரிய காணி இல்லை என முன்னாள் சபைத் தலைவர் 2022  ஆம் ஆண்டு கூறியிருக்கிறார். . அதே வேளை இந்த கட்டிடம் அருகில் உள்ள காட்டு மாரியம்மன் ஆலயத்துக்குரியது என்றும்   கட்டிடம் கட்ட நாம் அனுமதி வழங்கவில்லையென கூறும் முன்னாள் சபை செயலாளர்,  காணி பிரதேச சபை எல்லைக்குட்பட்டது அல்ல  என்றும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள செயலாளரோ இக்கட்டிடம் அமைந்துள்ள காணியை பிரதேச சபைக்கு வழங்க சம்மதம் தெரிவித்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு கடிதம் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் கட்டிடம் குறித்த கேள்வி அறிவித்தல் விளம்பரத்தில் (ஏலம்) கடைத்தொகுதிகள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகள் என்பது தெளிவில்லை.

இவ்வாறான முரண்பாடான தகவல்களால், இக்கட்டிடம் யாருக்கு உரித்தானது என்ற சந்தேகம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டதால் அதை அடிப்படையாகக்கொண்டே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் கொட்டகலை பிரதேச சபை செயலாளர் கூறுகையில் இவ்வழக்கு  எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாம் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்போம் என்றார்.

மனுத்தாக்கல் செய்து முன்னாள் சபை உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா கூறுகையில், இந்த சட்டவிரோத கட்டிடம் எந்தவித தொழில்நுட்ப ஆலோசனைகள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அது இடிந்து விழாது என்ற உத்தரவாதத்தை யாராலும் வழங்க முடியாது.

இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் தான் கடந்த மூன்று வருடங்களாக போராடி வருகிறேன்.   தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக இக்கட்டிடம் குறித்த உண்மைத்தகவல்களை வெளிக்கொணர்ந்த வீரகேசரி  வார பத்திரிகைக்கு நன்றி. அந்த ஆவணமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.