உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.