20 வருடங்களாக நிசாந்த டி சில்வா இலங்கையின் முக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவராக காணப்பட்டார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து 2015 இல் அகற்றபட்டதும் புதிய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் பொறுப்பை நிசாந்த டி சில்வாவிடம் ஒப்படைத்தது.
அவர் ஐரோப்பிய நாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கும் ஹேக்கின் மக்கள் தீர்ப்பாயத்திற்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
எனினும் அவர் தனது கதையை ஊடகங்களிற்;கு தெரிவித்திருப்பது இதுவே முதல் தடவை.
கேள்வி
ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்?
பதில்- எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவபுலனாய்வு பிரிவினர் -கடற்படை புலனாய்வு பிரிவினரும் முன்னாள் ஜனாதிபதியும் மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.
பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விவகாரமே நிசாந்த சில்வா கையாண்ட விடயங்களில் முக்கியமானது.
இந்த விசாரணைகளின் போது அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் மிகவும் மோசமான செயற்பாடுகளிற்காக பெயர் பெற்ற திரிபோலி பிளாட்டுன் குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தின.
நான் திரிபோலி குழுவை சேர்ந்த ஐந்து நபர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்தேன் அந்த தொலைபேசி இலக்கங்கள் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன என நிசாந்த தெரிவித்தார்
நான் தொலைபேசி ஆவணங்கள் உட்பட பல விடயங்களை ஆராய்ந்தேன் இடங்களை கண்டுபிடிக்க முயன்றேன் என நிசாந்த சனல் 4 க்குதெரிவித்தார்.
அவர் கண்டுபிடித்த ஆதாரங்கள் லசந்த படுகொலை செய்யப்பட்ட அன்று காலை அவரது வீட்டிலிருந்து திரிபோலி குழுவை சேர்ந்தவர்கள் அவர் கொல்லப்படும் இடம்வரை பின்தொடர்ந்ததை உறுதி செய்தன.
பலர் கோட்டாபய ராஜபக்சவே லசந்த படுகொலையின் பின்னணியில் இருந்தார் என சந்தேகப்படுகின்றனர்.
தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை ஆராய்ந்து அந்த சந்தேகம் சரியானது என்பதை உறுதி செய்தவர் நிசாந்த.
ஆகவே நான் கோட்டாபய ராஜபக்சவை சிஐடிக்கு அழைத்தேன் என அவர் தெரிவித்தார்.
அது ஒரு துணிச்சலான நடவடிக்கை – அதிகாரத்தில் இல்லாத போதிலும் கோட்டாபய ராஜபக்ச அச்சத்தை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டார்- முக்கிய இடங்களில் செல்வாக்கு உள்ள நண்பர்கள் அவருக்கு இருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச என்னிடம் நீர் ஏன் என்னை லசந்த விக்கிரமதுங்க கொலைதொடர்பில் சந்தேகநபர் என குறிப்பிட்டுள்ளீர் எனகேட்டார் என நிசாந்த் தெரிவித்தார்.
அதற்கு நான் தேவையற்ற விடயங்களை செய்யவில்லை தேவையான விடயங்களை மாத்திரம் செய்கின்றேன் என தெரிவித்தேன் நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தேன் எனவும் நிசாந்த தெரிவித்தார்.
நான் உங்களை சந்தேகநபராக பெயரிட்டுள்ளேன் என தெரிவித்தேன் கோட்டபாய என்னை பற்றி அதிருப்தியடைந்தவராக காணப்பட்டார் என நிசாந்ததெரிவித்தார்.