மக்கள் தெளிவாக உள்ளதால் அவர்களை இனி ஏமாற்ற முடியாது

103 0

நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். வழமையான அரசியல் பிரசாரங்களை குறிப்பிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது.

மக்களின் அபிலாசைகளுக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறந்த காலத்தை பற்றி பேச விரும்பவில்லை,ஏனெனில் நாட்டுக்காக கட்சி பல சேவைகளை ஆற்றியுள்ளது.

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது.பொருளாதார பாதி;ப்புக்கு யார்? பொறுப்புக் கூற வேண்டும் என்று ஆராய்வதை காட்டிலும் பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்தி மூடிய பொருளாதாரக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தியிருந்தால் நாடு இன்று இந்த நிலையை அடைந்திருக்காது.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திக் கொண்டு பிரபல்யமடையாத தீர்மானத்தை அவர் எடுத்தார். இருப்பினும் அரசியல் மாற்றத்துடன் அவரது பொருளாதார கொள்கையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டில் போராட்டம் தோற்றம் பெற்றது. அரலகய (போராட்டம்) ஏன் தோற்றம் பெற்றது என்பதை ஆராய்ந்து அதற்கு விடை தேட வேண்டும்.இளைஞர்கள் புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள் வழமையான அரசியல் பிரசாரங்களை குறிப்பிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. மக்களின் அபிலாசைகளுக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் தோற்றம் பெறும் சவால்களை கட்சி என்ற ரீதியில் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என்றார்.