இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் ஜப்பானின் பங்கேற்பை பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் என்.எச்.கே ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் பல விடயங்கள் குறித்து பேசியுள்ள அவர்,
இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட புதிய சர்வதேச கட்டமைப்பிற்கு ஜப்பான் இணை தலைமைத்துவம் வழங்குகின்றது. ஜப்பானின் இந்த பணி, சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பிற்கும் வசதியாக அமைந்துள்ளது.
‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ- பசிபிக்’ கனவை நனவாக்கும் முயற்சியில் ஜப்பான், இலங்கையை ஒரு முக்கிய பங்காளியாக கருதுகிறது. அதேபோன்று பெல்ட் அண்ட் ரோட் என்ற பெயரில் தொடங்கப்பட்டு தற்போது உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தில் சீனா, இலங்கையை ஒரு பங்காளியாக கருதுகின்றது.
சீனாவிற்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, 2017 ஆம் ஆண்டில், நாட்டின் தெற்கில் உள்ள (ஹம்பாந்தோட்டை) ஒரு துறைமுகத்தின் நிர்வாகத்தை சீன நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைக்க நேரிட்டது.
துரதிஷ்டவசமாக கடன் பிரச்சனைகளை கையாளுவதற்கு சீனாவிடம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) போன்ற முகவர் நிலையங்கள் இல்லாததன் காரணமாக இவ்வாறு வழங்க வேண்டி ஏற்பட்டது.
எவ்வாறாயினும் சீன நிறுவனத்தினால் நடத்தப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. அத்துடன் ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை கப்பல்களும்
இலங்கை துறைமுகத்திற்கான அழைப்பை விடுத்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளதாக என்.எச்.கே தெரிவித்துள்ளது.