புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டு தலைவராக அநுர பிரியதர்ஷன யாபா தெரிவு

87 0

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தி தரப்பினரால் உருவாக்கியுள்ள புதிய மாற்று அரசியல் கூட்டணியின் செயல்பாட்டு தலைவராக அநுர பிரியதர்ஷன யாபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டணியின் கன்னி சம்மேளனத்தை ஜனவரி முதல் வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் குறித்த விபரங்களை கூடிய விரைவில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கூட்டணியின் முக்கிய செயல்பாட்டளர்களாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ண, அநுர பிரியதர்தன யாபா,  சுசில் பிரேமஜயந்த, நிமல் லன்சா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண, பிரயங்கர ஜயரத்ண, துமிந்த திசாநாயக்க மற்றும் சுதர்ஷனி உட்பட பலர் உள்ளனர். இவர்கள் உட்பட புதிய கூட்டணியின் முக்கிய செயல்பாட்டளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற குழு அறையில் கூடி நடத்திய கலந்துரையாடலின் பின்னரே அநுர பிரியதர்தன யாபாவை புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்துள்ளனர்.

நாட்டின் அபிவிருத்தி மற்றும்  ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை  ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சிக்குள் இருந்து புதிய மாற்று அரசியல் கூட்டணி உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட கூட்டணியின் முக்கிய செயல்பாட்டளர் ஒருவர், எதிர்வரும் தேசிய தேர்தல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டார். ஏற்கனவே ஒரு சில சிறுபான்மை இன கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக தெரிவித்த அவர் எதிர்வரும் நாட்களில் பிரதானமான தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை அநுர பிரியதர்ஷன யாபா தலைமையிலான குழு முன்னெடுக்க உள்ளதாகவும் கூறினார்.

இதே வேளை புதிய அரசியல் கூட்டணியை பிரதிநித்துவம் செய்கின்ற பாராளுமன்ற குழு இவ்வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவித்த அவர், பிரதான கட்சிகளின் தலைவர்களையும் கூடிய விரைவில் சந்தித்து கலந்துயாட உள்ளதகவும் குறிப்பிட்டார்.