முல்லைத்தீவு தண்ணீரூற்று குருந்தூர்மலை பகுதியில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இருந்த பகுதி தொல்பொருள் முக்கியத்துமிக்க இடமாக பிரகடனப்படுத்தப்பட்டு திட்டமிட்டவகையில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கு விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்தப்பகுதியினை முழுமையாக சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் அங்கு சென்று பொங்கல் பொங்குவதற்கு கூட படாதபாடு படவேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா வெடுக்குநாறிமலைப் பகுதி தொல்பொருள் பிரதேசம் என்ற பேரில் சுவீகரிக்கப்பட்டு அங்கும் பெளத்தத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேபோன்று வடக்கில் பல்வேறு இடங்களிலும் பெளத்த விகாரைகளை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்றே கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு தற்போது முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விகாரை நிர்மாணிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்ததையடுத்து தற்போது அவருக்கு எதிராக பெளத்த பிக்குகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலுப்பைக்குள பிரதான வீதியில் அமைந்துள்ள காணியில் விகாரை அமைப்பதற்கான துப்புரவு பணி இடம்பெற்றிருந்தது. வில்கம் விகாரை விகாரதிபதியினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு முறைபாடு செய்ததுடன் அரசாங்க உயர் மட்டத்தினருடனும் கலந்துரையாடியிருந்தார்.
சிங்கள மக்கள் வாழாத இலுப்பைகுளம் பகுதியில் விகாரை அமைக்கும் நடவடிக்கை இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து விகாரை அமைக்கும் செயற்பாட்டுக்கு திருகோணமலை பட்டணமும் சூழலுக்குமான பிரதேச செயலாளரினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் செந்தில் தொண்டமானின் உத்தரவுக்கு அமையவே இந்த தடை விதிக்கப்பட்டது.
விகாரை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மறுநாள்12ஆம் திகதி பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரின் செயற்பாட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெளத்த பிக்குகள் நாங்கள் தொல்லியல் காணிக்குள் விகாரை அமைக்கவில்லை.அதற்கு அண்மையிலுள்ள புத்தசாசன அமைச்சினால் பெளத்த விகாரைக்காக வழங்கியுள்ள காணியில்தான் விகாரையை அமைக்கப்போகிறோம். இதனால் எவருக்கும் பிரச்சினை இருக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செயலகத்தில் நடைபெறவிருந்த நிலையில் செயலகத்துக்கு முன்பாக பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். இலுப்பைக்குளத்தில் விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெளத்த பிக்குகள் சிலரை அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியதுடன் விகாரையை அமைப்பதற்கான அனுமதியை வழங்க முடியாமைக்கான காரணங்களையும் விளக்கியிருந்தார்.
இதனையடுத்து செயலகத்தில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அதற்குள் அத்துமீறி பிரவேசித்த பெளத்த பிக்குகள் குழப்பம் விளைவித்ததுடன் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பிவைத்திருக்கின்றார். முதலாவது கடிதத்தில் சிங்கள மக்கள் வாழாத இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை அமைப்பதனால் ஏற்படக்கூடிய இனமுறுகல் நிலைமை தொடர்பில் விளக்கி கூறியிருக்கின்றார். அதேபோன்றே சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ள இரண்டாவது கடிதத்திலும் அவர் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலுப்பைக்குளம் விகாரை விவகாரத்தால் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாது இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைளை எடுக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். விகாரை விவகாரத்தால் திருகோணமலை பிராந்தியத்தில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது மாத்திரமல்லாமல் நாட்டின் விரைவான அபிவிருத்திக்கு இந்த விடயம் தடையாக இருக்கும் என கவலையடைகிறேன்.
நான் எந்தவொரு மதத்துக்கும் எதிரானவனல்ல. ஆனால் தற்போது காணப்படும் நிலைமை தொடருமாக இருந்தால் ஏற்கனவே தங்களால் திட்டமிடப்பட்டிருக்கும் பொருளாதார முதலீடுகளுக்கும் இடையூறு ஏற்படலாம் என்றும் சம்பந்தன் இந்தக்கடிதத்தில் எடுத்துக்கூறியிருக்கின்றார்.
இவ்வாறு விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தனதேரர் இந்த விகாரை விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புத்தசாசனம் மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் பட்டினங்கள் பிரதேச செயலகப்பிரிவு பகுதி தொல்பொருள் மரபுரிமைக்கு சொந்தமானது. ஆறு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு 60 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. வில்கம் விகாரை விகாராதிபதி சீலவன்ச திஸ்ஸ தேரருக்கு இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த காணியை தூய்மைப்படுத்தி அங்கு வசிப்பதற்கு தேரர் சென்றபோது அதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான தடை விதிக்குமாறு நகர மற்றும் பட்டணங்கள் பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு தடை உத்தரவு விதிக்க மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளருக்கும் அதிகாரமுள்ளதா? என்று அத்துரலியே ரத்தன தேரர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பெரலுகந்த விகாரை புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அங்கு விகாரதிபதி செல்வதற்கு எந்த தடையுமில்லை. அதனை தடுப்பதற்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதிலிருந்து இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு புத்தசாசன அமைச்சானது காணியை வழங்கியுள்ளமை நிரூபணமாகின்றது. அந்தக்காணிக்குள்தான் விகாரை அமைப்பதற்கு தற்போது பிக்குகள் முயன்று வருகின்றனர். ஆனாலும் இன முறுகல் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்த விகாரை அமைப்பதற்கு தடை விதித்திருக்கின்றார்.
ஆனாலும் இதற்கான தடை விதிப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று பெளத்த சாசன அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து வடக்கு, கிழக்கில் பெளத்த விகாரைகளை அமைக்கும் விடயத்தில் மறைமுகமாக பெளத்த சாசன அமைச்சின் ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றமை புலனாகின்றது.
இத்தகைய நிலையில்தான் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடானது இன நல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன் பாராட்டியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதத்தை எழுதியிருக்கின்றார்.
மொத்தத்தில் வடக்கு, கிழக்கில் பெளத்த, சிங்கள மேலாதிக்கவாதத்தை பரப்பி தமிழர்களின் இனப்பரம்பலை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதை திருகோணமலை விகாரை விவகாரம் எடுத்து காட்டுகின்றது. எனவே இந்த விடயத்தில் இன முரண்பாடுகளை தவிர்க்கும் வகையிலான செயற்பாடுகள் அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.