சீனாவை விட அளவிலும் சனத்தொகையிலும் மிகச் சிறிய நாடாக கணப்படுகின்ற இலங்கை மீது சீனா வைத்திருக்கும் ஆதிக்கம் அயல் நாடான இந்தியாவின் உறவை பாதிக்கும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து சீனா உதவி என்ற போர்வையில் கடன்களை வழங்கி இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
சீனாவின் குறித்த ஆதிக்கமானது அயல் நாடான இந்தியாவை சீண்டிப் பார்க்கும் ஒரு செயல்பாடாகக் காணப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொருளாதார கலாச்சார மற்றும் சமூக நீதியான நீண்ட வரலாற்றைக் கொண்ட தொடர்புகள் இருக்கிறது .
இவை எல்லாவற்றையும் கடந்து சீனா இலங்கை மீது பொருளாதார ரீதியான ஆக்கிரமிப்பைச் செலுத்துவது இலங்கையையும் இந்தியாவையும் பகையாளிகளாக பார்ப்பதற்கு செய்யும் ஏற்பாடாகும்.
இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இம்மாத இறுதிப் பகுதியில் ஆய்வுக்குப்பல் ஒன்று இலங்கை அம்மாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.ஆகவே இலங்கை மீது சீனா கொண்டுள்ள ஆதிக்கத்தை மேலும் தக்க வைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இத்தகைய செயல்பாடு இலங்கை இந்தியா உறவுகளை சீண்டி பார்ப்பதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.