உள்நாட்டு முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்படும் அபாயம்!

194 0

இந்தியாவில் இருந்து 3 மாதங்களுக்கு முட்டையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளமையினால் உள்நாட்டு முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிப்படையும் என இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் எதிர்வரும் 3 மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, 92.1 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்காக நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

உள்ளுர் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 இந்திய நிறுவனங்களிடம் இதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த. இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, சிறிய மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் பலர் முட்டை உற்பத்திக்கான கோழிகளை, இறைச்சிக்காக விற்பனை செய்து விட்டு இந்த தொழிற்துறையை விட்டு விலகியுள்ளனர்.

இதன் காரணமாக அரசாங்கம் இலங்கை உற்பத்தியாளர்களை பாதுகாக்கின்றதா? அல்லது இந்திய உற்பத்தியாளர்களை பாதுகாக்கின்றதா? என்ற கேள்வி எழுவதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.