இலங்கையின் முயற்சிகளுக்கு தாய்லாந்தின் ஒத்துழைப்பு தொடரும்

106 0

இலங்கை படிப்படியாக அடைந்துவரும் பொருளாதார மீட்சியைப்பாராட்டியுள்ள தாய்லாந்து, தமது இருவருட அமுலாக்க செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5 ஆவது இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை (28) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றன.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்து நாட்டின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார நிரந்தர செயலாளர் சருண் சரேன்சுவான் ஆகியோரால் தலைமைதாங்கப்பட்ட இப்பேச்சுவார்த்தையில் அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலா என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் பரஸ்பர அக்கறைக்குரிய பல்வேறு துறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கையானது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தாய்லாந்துடனும் பரந்துபட்ட ஆசியான் பிராந்தியத்துடனும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாக தாய்லாந்து பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். குறிப்பாக தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்குவந்த விரிவான பிராந்தியப் பொருளாதாரப் பங்காளித்துவ உடன்படிக்கையில் இணைவதற்கு இலங்கை உத்தேசித்திருப்பதாகவும், அந்த உடன்படிக்கையின் 15 ஸ்தாபக உறுப்புநாடுகளில் ஒன்று என்ற ரீதியில் இவ்விடயத்தில் தாய்லாந்து தமக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அருணி விஜேவர்தன கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து புதிய பிரதமர் நியமனம் உள்ளடங்கலாக தாய்லாந்தின் அண்மையகால முன்னேற்றங்கள் குறித்து வெளிவிவகார செயலாளருக்குத் தெளிவுபடுத்திய சருண் சரேன்சுவான், கடந்த ஆண்டிலிருந்து இலங்கை படிப்படியாக அடைந்துவரும் பொருளாதார மீட்சியைப் பாராட்டியதுடன் தாய்லாந்தின் இருவருடகால செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதுமாத்திரமன்றி ஆசியான், பிம்ஸ்டெக், ஐயோரா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பிராந்திய மற்றும் பல்தரப்புக் கட்டமைப்புக்களின் அண்மையகால நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.