மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடனேயே இருப்பார்களாம்!

122 0

ஜனாதிபதி வேட்பாளராக யார் முன்வந்தாலும்  தேசத்தை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவே பொது வேட்பாளர். நாட்டு மக்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கின்றனர்.

அத்துடன் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதில்லை என்பதை நூறுவீதம் உறுதியாக தெரிவிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை ( 28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், 

ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக அடுத்த வருடம் இடம்பெறும். அதில் தேசத்தை பாதுகாத்தவர் என்றவகையில் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக பாேட்டியிடுவார் என்பதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. அதேநேரம் டலஸ் அணி  புதிய கூட்டணி அமை்பபதற்காக தற்போது ஜே,வி.பி. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறது.

இவர்கள் கூட்டணி அமைப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு எந்த சவாலும் ஏற்படப்போவதில்லை. ஆனால் மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்க  தலைமையிலான அரசாங்கம் படிப்படியாக கட்டியெழுப்பிவரும் நிலையில் இவர்கள் கூட்டணி அமைத்து அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது அதனால் மக்களுக்கே மீண்டும் நெருக்கடி நிலைமைகள் ஏற்படும்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச ஒருபோதும் வேட்பாளராக களமிங்கப்போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என தற்போது தெரிவித்து வந்தாலும் அது இடம்பெறப்போவதில்லை. அதனை நூறு வீதம் உறுதியாக தெரிவிக்கிறேன்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவிலும் இறுதி நேரத்தில் டலஸ் அழகப்பெருமவை முன்னிலைப்படுத்தி அவர் ஒதுங்கிக்கொண்டார். அதேபோன்று தற்போதும் டலஸ் அல்லது மைத்திரிபால சிறிசேனவை இறுதி நேரத்தில் பலிகொடுத்து அவர் தப்பிக்கொள்வார்.

மேலும் பொதுஜன பெரமுன பசில் ராஜபக்ஷ்வை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டாலும் அவர்களுக்குள் இன்னும் உறுதியான தீர்மானம் இல்லை. ஏனெனில் அந்த கட்சியில் அதிகமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி, அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அதனால் பசில் ராஜபக்ஷ் விருப்பம் என்றால் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடியும்.

அதனால் பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு எந்த கட்சியும் ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்க தீர்மானித்தாலும் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக களமிக்குவோம். நாட்டின் தற்போதைய நிலைமையில் ரணிவ் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக நியமிக்கப்படவேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடாகும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானால் மாத்திரமே நாட்டை மீட்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னுக்கு கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்கள் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்படும். அந்த நிலைக்கு மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.