குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்க விசேட வேலைத்திட்டம்

83 0

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்  ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் 10 வைத்திய முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகிறது.

EY Global Delivery Service வழங்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மூலம், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே முன்னெடுத்து வருகிறது.

தற்போது கொலன்னாவ, மெகொட கொலன்னாவ, பொல்கஸ்ஸோவிட்ட ஆகிய பிரதேசங்களில் மூன்று மருத்துவ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தன. இந்த ‍ வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு, பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகங்கள், தொற்றா நோய் பிரிவுகள் மற்றும் மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரிகள்,  குறித்த பகுதிகளுக்கான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார அதிகாரிகளிடமிருந்து அதிகபட்ச ஆதரவு கிடைத்ததாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஜகத் அபேசிங்க  தெரிவித்தார்.