சரக்கு ஏற்றுமதி ஒரு பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது

98 0

நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் அளவைத் தாண்டியுள்ளதாக சமீபத்திய தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​ஜூலை மாதத்தில் இலங்கை வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 1027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது 2.18 வீத அதிகரிப்பு என இலங்கை சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.79 சதவீதம் வீழ்ச்சியாகும்.

ஏற்றுமதி பொருட்கள், குறிப்பாக ஆடைகள் மற்றும் ஜவுளிகள், ரப்பர் மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள் மற்றும் தேங்காய் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்களுக்கான கேள்வி குறைந்த காரணத்தால் சரக்குகளின் ஏற்றுமதி குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 1228.17 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 17.32 வீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.