பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம்

133 0

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (29)வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மிக அண்மைக்காலமாக காவி உடை தரித்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும், நிர்வாகத்திற்கும் பயங்கர அச்சசுறுத்தலாக அமைந்துள்ளதை  நாட்டின் சட்டம் அங்கீகரிக்கப் போகின்றதா? எனக் கேற்பதோடு கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது காவி உடைத்தவர்களின் பயங்கரவாத செயற்பாட்டினால்  கூட்டம் தடைப்பட்டுள்ளமை தொடரப்போகும் காவி உடை தரித்தவர்களின் தீவிரவாதம் வெளிப்பட்டுள்ளது. இது நாட்டின் ஏனைய பிரதேசங்களின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாகவும், பிழையான முன் உதாரணமாகவும் அது அமைந்து விடப் போகின்றது. இத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தல்களை தொடர்ந்து அரசு அனுமதிக்க கூடாது.

நாட்டின் ஒரு சாதாரண குடிமகன், அல்லது விவசாய அமைப்புகள், மீனவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சுகாதாரத்துறை சார்ந்தோர் தமக்கான நீதி கிட்டவில்லை என்பதற்காக அரசு திணைக்களங்களுக்குள் அல்லது அமைச்சர்கள் ஆளுநர்களின் தலைமையின் கீழ் நடக்கும் உத்தியோகபூர்வ கூட்டத்திற்குள் அத்துமீறி உள் நுழைய முடியுமா? அதற்கு பாதுகாப்பு தரப்பினர் இடமளிப்பார்களா? அவ்வாறு உள் நுழைந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?

பௌத்தத்தின் பெயரால் காவி உடை தரித்து ஒரு சிலர் நீதித்துறைக்கு, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதையும் ஏனைய சமய தலைவர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும் செயற்பாட்டுக்கும் தடையாக இருப்பதை எந்த சட்டம் அங்கீகரிக்கின்றது?

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் சர்வ மத தலைவர்கள் சிலரை காவி உடை அணிந்தோர் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருந்தனர். குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் அனுமதியோடு நடைபெற்ற பொங்கலுக்கு தடையாக இருந்தனர். அரச அதிகாரிகள் மற்றும் பொலிசாரையும் தாக்குகின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர். 36 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என நாடாளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி 13ஆம் திருத்த நகலை பகிரங்க வெளியில் தீட்டு கொழுத்துகின்றனர். பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைக்கின்றனர் இதுவே பயங்கரவாதம்.

இவ்வாறு நீதிக்கு அப்பாற்பட்டு  செயல்படுவோரை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் தயங்குவதாக தோன்றுகின்றது. அல்லது அவர்களின் பின்னால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சிந்திக்க வைக்கின்றது.

மிக அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சட்டம் ஒழுங்கை மீறுகின்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார். தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்குள் நுழைந்து  அமைதிக்கு பங்கம்  விளைவித்தவர்கள் கைது செய்யப்படுவார்களா?

நாட்டில் மீண்டும் இனவாத மதவாத வன்முறைகள் பலவந்தமாக தூண்டப்படுகின்றதை உடனடியாக தடுத்து நிறுத்துதல் வேண்டும். நீதி மன்றும் நிர்வாகத்திற்கு தடையாக இருப்போர் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படல் வேண்டும். குறிப்பாக நாடாளுமன்ற சிறப்புரிமையை பாவித்து வன்முறைக்கு தூபமிடுவோர் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இருந்து இடைநிறுத்தப்படல் வேண்டும்.

பெரும்பான்மை இன அல்லது பெரும்பான்மை சமயத்தின் பெயரால் நடக்கும் அடவாடித்தனத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்குகின்றனர். அல்லது அதனைப் பார்த்து மகிழ்கின்றனர். இதனை அடுத்த தேர்தலுக்கான அறுவடையாக கூட நினைக்கின்றனர். இவர்களின் சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிடக்கூடாது. பதவி மோகத்தோடு இதனை அங்கீகரிப்பவர்களை மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் சர்வதே சமூகத்தின் முன் தலை குனிவு ஏற்படுவதோடு தற்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை விட மிக மோசமான நிகழ்ச்சியை சந்திக்க நேரிடும்.

விசேடமாக சமயத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ இன்னுமொரு இனத்தினை அல்லது சமயத்தினை அவமதிப்பதும் முறுகல் நிலையை தோற்றுவிப்பதும் , அதற்கான கருத்துக்களை வெளியிடுவதும் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்வதும் , அதற்காக மக்களை திரட்டுவதும், தொல்லியல் வரலா ற்று சின்னங்களை அகற்றுவதும் அழிப்பதும் மறுப்பதும் கூட பயங்கரவாதமே. இதற்கு அரசு இடமளிக்கக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்தார்.