குருந்தூர் மலை பகுதியிலுள்ள ஒரு சில இடங்கள் விடுவிப்பதனை மீள் பரிசீலனை செய்ய முடியும் என தொல்பொருள் உதவி பணிப்பாளரால் கூறப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28.08.2023) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய காணிகள் விடயம் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் குருந்தூர் மலை தண்ணிமுறிப்பு பகுதியில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்களம் அண்மைக்காலமாக ஆக்கிரமித்து கொண்டிருக்கின்ற விவசாய நிலங்களை விவசாயம் செய்ய முடியாமல் தடுத்து வந்தார்கள்.
அன்றைய கூட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினுடைய உதவி பணிப்பாளரிடம் என்னால் வினாவப்பட்டது மக்களுடைய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க முடியுமா என்பதனை நேரடியாக பார்த்து பதில் கூறும்படி அதன்படி இன்று பல்வேறுபட்ட திணைக்களங்கள் உட்பட தொல்பொருள் திணைக்களமும் இணைந்து இவ்விடங்களை மக்களும் நேரடியாக சென்று பார்வையிடப்பட்டது.தண்ணிமுறிப்பு குளத்தில் இருந்து செல்லும் வாய்க்காலும் நேரடியாக காட்டப்பட்டது. உதவி பணிப்பாளர் தன்னால் ஒரு சில இடங்கள் மீள் பரிசீலனை செய்ய முடியும் எனவும் முடிவெடுக்க முடியாதெனவும் பணிப்பாளர் நாயகத்தினுடைய மேற்பார்வையில் இங்கே ஒரு விஷேட குழு நேரடியாக விஜயம் செய்து இந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாக அவர் தான் முடிவெடுக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. தொல்பொருள் அமைச்சர் விதுரவிக்கிரம நாயக்கவுடன் தற்போது தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி நடந்த விடயங்களை தெரியப்படுத்தியுள்ளேன்.
குறித்த விடயம் தொடர்பில் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்துவிட்டு எனக்கு பதில் கூறுவதாக கூறியிருக்கிறார் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.