காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தால் அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்படாது

63 0

வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் தமது அலுவலக செயற்பாடுகள் எவ்வகையிலும் பாதிக்கப்படாது எனத் தெரிவித்துள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, எதிர்வரும் 6 மாதகாலத்தில் பூர்வாங்க விசாரணைகளை நிறைவுசெய்யப்படுவதுடன் ஒருவருடத்துக்குள் இவ்விடயத்தில் சிறந்த முன்னேற்றம் எட்டப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான புதன்கிழமை (30) வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப்பொறிமுறைகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், சர்வதேசப்பொறிமுறையின் ஊடாகவே தமக்குரிய நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு மத்தியில் எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்து இதுவரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை எதிர்வரும் 6 மாதகாலத்துக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், அதனூடாக இவ்விடயத்தில் அடுத்த ஒருவருடத்துக்குள் சிறந்த முன்னேற்றம் எட்டப்படும் என்றும் மகேஷ் கட்டுலந்த நம்பிக்கை வெளியிட்டார்.

குறிப்பாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தலையீடு செய்து, அவ்வகழ்வு நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் 57 இலட்சம் ரூபாவை உடனடியாக ஒதுக்கீடு செய்வதற்கு வழியேற்படுத்திக்கொடுத்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், கொக்குத்தொடுவாயில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதா? அவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களா? அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களா? என்பது அடுத்தகட்டப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளிலேயே தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரை இலக்காகக்கொண்டு தாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், தான் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளராகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து தற்போதுவரை அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களின் மூலம் அதனைப் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறினார்.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் தமது அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும், அவை வழமைபோன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் குறிப்பிட்ட அவர், நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறை தற்போது இயங்கிவருவதனால் அவர்கள் கோருவதுபோன்று சர்வதேசப்பொறிமுறையொன்று அவசியமில்லை என்பதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.