ரத்வத்தை விவகாரத்தை ஜனாதிபதிக்கு சொல்வேன்: ஆனந்தகுமார்

117 0

மாத்தளை எல்கடுவ  பெருந்தோட்ட கம்பனியின் தோட்ட அதிகாரியின் செயலை வன்மையாக கண்டித்துள்ள  ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் இந்த விவகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளரின் செயலை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குறித்த உதவி முகாமையாளரால் வீடு அடித்து நொறுக்கப்பட்டதை ஏற்றுகொள்ள முடியாது. தோட்டங்கள் குத்தகைக்குத்தான் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு  சொந்தமாக எழுதிக்கொடுக்கவில்லை என்பதை ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பெருந்தோட்டப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதை அவதானிக்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெருந்தோட்ட சமூகத்தை நிலவுரிமையுள்ள சமூகமாக மாற்றுவதே அதற்கு ஒரே தீர்வு. அதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீட்டை நிர்மாணித்துக்கொடுக்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டை ​அடுத்து  நிர்வாகம் இணங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

கட்சிபேதங்களுக்கு அப்பால் அனைவரும் எமது மக்களுக்கான பிரச்சினைகளில் கைகோர்த்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு இனி அனுமதியளிக்க முடியாது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பத்திரிகையில் அரசியல் செய்யாமல்   சரியான நேரத்தில் மக்களுக்காக களம் இறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.