மட்டக்களப்பில் மரியாள் தேவாலய திருவிழாவின்போது பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொள்ளை குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் குழுவினை இயக்கிவந்த வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 2 ஆண்களை கடந்த சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் வைத்து மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவலாயம் மற்றும் மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாவின்போது 19 பவுண் தங்க சங்கிலிகள் திருட்டுப் போயிருந்த சம்பவத்தில் 4 பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.
இதில் தேவாலய திருவிழாவில் கலந்துகொண்ட பெண் ஒருவரின் 2 1/2 பவுண் கொண்ட தங்க சங்கிலியை அறுத்தெடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 3 பெண்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்று உத்தரவிட, அவர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
அந்த 3 பெண்களையும் பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்ற 28 வயதுடைய இரண்டு ஆண்களை கடந்த சனிக்கிழமை சிறைச்சாலைக்கு அருகில் வைத்து சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களை பொலிஸார் விசாரித்தபோது, கைதானவர்கள் வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் நாடு முழுவதும் ஆலயங்கள், தேவாலயங்களில் கொள்ளையிடும் கொள்ளை கும்பலை இயக்கி வருபவர்கள் என்கிற விடயமும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் நாடு முழுவதும் நிகழும் ஆலய மற்றும் தேவாலய திருவிழாக்கள், உற்சவங்கள் தொடர்பாக முகநூல்களில் வெளிவரும் விளம்பரங்களை தரவிறக்கம் செய்து, அவற்றை நாடெங்கிலும் உள்ள தமது கொள்ளை குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பும் செயலை வழக்கமாக செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த கொள்ளை குழுவின் பிரதான சூத்திரதாரி நீர்கொழும்பைச் சேர்ந்த சுரேஸ் எனவும் அவர் உட்பட இந்த கொள்ளை குழுவைச் சேர்ந்த பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை கைதான இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாவின்போது 28 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 பெண்களிடம் இருந்து இதுவரை கொள்ளையிட்ட தங்க சங்கிலிகள் எதுவும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.