தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்;

73 0

பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயணத்தின் தாக்கம், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் பகுதியில் தேமுதிக கல்வெட்டுத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பொருளாளர் பிரேமலதா கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கல்வெட்டைத் திறந்துவைத்தார். முன்னதாக, காத்தான்கடை பகுதியில் தேமுதிக தொண்டர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: நீட் தேர்வு தேவையில்லை என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. திமுகதான் மாணவர்களைக் குழப்புகிறது. இதனால்தான் மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. மாணவர்களை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.

திமுகவின் இரண்டரை ஆண்டு ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இனியாவது வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு நன்மை செய்ய வேண்டும்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா உயிரிழந்தபோது, மயானத்துக்கு நேரில் சென்று முதலில் அஞ்சலி செலுத்தியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது.

தமிழகத்துக்கு நடைபயணம் புதிதல்ல. நான் வரும்போதுகூட, ஏராளமானோர் வேளாங்கண்ணி மாத கோயிலுக்கு நடைபயணமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன். பாஜக முதன்முறையாக நடைபயணம் மேற்கொண்டுள்ளது.

அண்ணாமலை நடைபயணத்தின் தாக்கம், வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும். அதேநேரத்தில், அவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், நடைபயணம் மூலம் அது சரியாகிவிடும். தேமுதிக தலைவர் விரைவில் முழு உடல்நலம் பெறுவார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.