அரச வைத்தியசாலைகளில் இடம்பெற்று வரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையை போக்குவதற்கு ஓய்வு பெற்றவர்களை சேவைக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானி்த்துள்ளது. அவ்வாறு மீள அழைக்கப்படும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பீ.விஜேசூரிய தெரிவித்தார்.
நாட்டில் அரச வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு ஏற்பட்டுவரும் பற்றாக்குறையை போக்குவதற்கான குறுகிய கால நடவடிக்கையாக இதனை பின்பற்ற இருக்கிறோம். அதேபோன்று வெளி மாகாணங்களில் அரச வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களுக்கு ஏற்பட்டு வரும் பற்றாக்குறையை போக்குவதற்காக , தற்போது அங்கு பணி புரிந்துவரும் வைத்திய நிபுணர்களுக்கு 63 வயது வரை சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க இருக்கிறோம்.
அதேநேரம். எதேனும் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் 63 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச்சென்றால், அந்த வெற்றிடத்தை நிரப்ப வேறு விசேட வைத்திய நிபுணர் ஒருவர் குறித்த வைத்தியசாலைக்கு வரவில்லை என்றால், ஓய்வு பெற்றுச்சென்ற வைத்திய நிபுணரை ஒப்பந்த அடிப்படையில், தொடர்ந்தும் சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அத்துடன் தற்போது ஓய்வி பெற்றுச்சென்றிருக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் மீண்டும் அரச வைத்தியசாலையில் சேவை செய்வதற்கு விரும்பினால் அவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மீண்டும் சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியும் எனவும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.