சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்காவைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஸ்ரீரங்காவினது மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.
இதன்பின், கொல்லப்பட்ட அதிகாரியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறி வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கை, அப்போது செட்டிக்குளம் காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த காவல்துறை பரிசோதகர் சஞ்ஜீவவின் கையெழுத்தை போலியாக இட்டே தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக போலியான பீ அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், இதற்கு அப்போது காவல்துறைமா அதிகாரியாக இருந்த மகிந்த பாலசூரிய உட்பட உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ரங்கா ஓட்டிச்சென்ற க்றூசர் வாகனம் பதிவு செய்யப்படவில்லையென காவல்துறையினர் விசாரணையின்போது கண்டுபிடித்துள்ளனர்.மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி ஓட்டிச்சென்ற ஜீப் வண்டி செட்டிக்குள வைத்தியசாலை மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஸ்ரீரங்காவின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார். தற்போது, ஸ்ரீரங்காவே வாகனத்தை ஓட்டிச் சென்றதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் சிக்கியுள்ளது.
ஸ்ரீரங்காவிடம் விசாரணை நடாத்தியபோது தான் வாகனத்தை ஓட்டிச் செல்லவில்லையெனத் தெரிவித்துள்ளார். தற்போது, விசாரணையின்மூலம் கிடைத்த அனைத்துச் சாட்சியங்களும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.