நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டன!

126 0

நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்று வீதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்கும் என யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் (21) ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றும் செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே வீதிகள் திறந்துவிடப்படும் எனவும் யாழ்ப்பாண மாநகர சபை மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து, யாழ்ப்பாண நகரை அடைய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின்போது கச்சேரி நல்லூர் வீதியினூடாகவே பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆலய சுற்று வீதிகளில் வசிப்பவர்கள் தமது வாகனங்களை வீதிகளுக்குள் கொண்டுசெல்வதற்கு யாழ்ப்பாண மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர வேறு வாகனங்கள் எக்காரணத்தாலும் உட்நுழையக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.