பாகிஸ்தானில் தேவாலயங்கள், வீடுகள் தாக்கப்பட்ட விவகாரம்: 129 பேர் கைது

189 0

பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக 129 முஸ்லிம்களை அந்நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஃபைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்ற கிறிஸ்தவர், குரான் புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்தெறிந்ததாக பரவிய தகவலை அடுத்து, அந்த நகரில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது ஒரு கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு தேவாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், 4 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 12 வீடுகள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வன்முறை கும்பல் வருவதை அறிந்த கிறிஸ்தவர்கள் அங்கிருந்து உடனடியாக மறைவான பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர். வன்முறை ஓய்ந்ததை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு இன்று திரும்பினர். தங்கள் வீட்டில் இருந்த மரச்சாமான்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். பலர் கண்ணீர் விட்டு கதறினர். இந்த சம்பவத்தால் மிகவும் அச்சமடைந்திருப்பதாகவும், அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முஸ்லிம் மத குருமார்கள் மற்றம் காவல்துறையினரின் வருகையை அடுத்து அங்கு அமைதி திரும்பி உள்ளது. எனினும், சிறுபான்மையினருக்கு எதிரான இந்த தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இடைக்காலப் பிரதமராக இருக்கும் அன்வாருல் உல்ஹக் காதரின் உத்தரவை அடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிராந்திய காவல்துறை தலைவர் ரிஸ்வான் கான் தெரிவித்துள்ளார்.