மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது..!

155 0

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று  திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (17)  முல்லைத்தீவு மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன்  தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  கொக்குளாய்  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்தரணி வி கே நிரஞ்சன், தொல்பொருள் திணைக் களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக,  கொக்குத்தொடுவாய் மத்தி  கிராம அலுவலர் எம். அஜந்தன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகியிருந்தனர்

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலகவால் குறித்த அகழ்வு பணிக்கு ஆறு வாரங்களுக்கு 1.2 மில்லியன் ரூபா பாதீடு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது

தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான நிதிகள் கிடைக்கப்பெறாமல் அதனுடைய வேலைகளை ஆரம்பிக்க முடியாது என்று சட்ட வைத்திய அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் உரிய நிதிகள் கிடைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 15 நிமிடங்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

இதன் பின்னர் மீண்டும் நீதிமன்றம் ஆரம்பமாகி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கில்  சட்டத்தரணி வி கே நிரஞ்சன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை என்பதை தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததன்படி 21 ஆம் திகதி அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்றும் அதன் தொடர்ச்சியாக இந்த அகழ்வுப்பணிகள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது

இதன் அடிப்படையில் குறித்த அகழ்வு பணி இடத்திலே முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாக பல்வேறு திணைக்களங்கள் இதில் கலந்துரையாடுவதற்கு இந்த இடத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களையும் அடுத்த தவணையில் அழைத்து உரிய தீர்வுகளை எட்டி இந்த அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு  மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  அவர்களால் நீதிமன்றத்திற்கு கருத்தை முன்வைத்தார்

இதன் அடிப்படையில் இலங்கை மின்சார சபை,கரைதுறைப்பற்று  பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று  பிரதேச சபையினுடைய செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசாங்க  அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபர் அல்லது நிதி தொடர்பாக கையாளக்கூடிய அதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், நில அளவை திணைக்களத்தினுடைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை  அதிகாரிகள், தொல் பொருள் திணைக்கள  அதிகாரிகள், கொக்குளாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தடயவியல் பொலிசார், காணாமல் போனோர்  அலுவலகத்தினுடைய பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியினுடைய கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினர் அனைவரையும் அடுத்த தவணையில் மன்றில் பிரசன்னமாக உத்தரவிடுமாறும்  அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி  உறுதியான தீர்மானத்தை எடுத்து  அகழ் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்

சட்டத்தரணி நிரஞ்சன் அவர்கள் குறித்த வழக்கில் அகழ்வு பணியுடன் தொடர்புடைய  பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளையும்  அழைத்து உரிய  முடிவை எடுத்து மழைக்கு முன்பதாக இந்த அகழ்வு பணியினை விரைவுபடுத்தி  அகழ்வு  பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதினால் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்

இதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31.08.2023  அன்றுக்கு தவணையிட்டு அன்றைய  தினம்(31) அனைத்து தரப்பினரையும் நீதிமன்றில் முன்னிலையாக கட்டளை ஆக்கினார்.