அரசியல் தீர்வுகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்திடம் சீனி கேட்பதற்காக மக்கள் அங்கீகாரம் தரவில்லை!

117 0
தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்திடம் சீனி வாங்குவதற்காக எமது மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு என்றும் குட்டிமணி, தங்கதுரை, சிறீ சபாரத்தினம் போன்றவர்களால் வழி நடத்தப்பட்ட எமது கட்சி அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக விலை போக முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நைனாமடுவில் சீனி தொழிற்சாலையை கேட்டார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்னார் மாடு மாதா ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தது எமக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .

வவுனியா நயினாமடுவில் சீனி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட போவதாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில் சீனி தொழிற்சாலைக்கும் எமது கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இன்று அது உண்மையாகி விட்டது.

சீனித் தொழிற்சாலையை எமது கட்சி தான் கேட்டது என பிரதேச  அமைப்பாளர்களுக்கோ தலைமை குழு உறுப்பினர்களுக்கோ தெரியாது. அது பற்றிய எம்மிடம் பேசவும் இல்லை. ஜனாதிபதி கூறிய போது தான் எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

தமிழ் மக்களுக்களின் அரசியல் தீர்வுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நாம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களின் தீர்வுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இவ்வாறான நிலையில் எமது அரசியல் தீர்வுகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்திடம் சீனி கேட்பதற்காக  மக்கள் அங்கீகாரம் தரவில்லை.

யுத்தத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவில்லை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, ஜெனீவா தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை மற்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சமஸ்டி தீர்வு வழங்கப்படாத நிலையில் சீனி தொழிற்சாலையை அரசாங்கத்திடம் கேட்டது ஏன்.

எமது தலைவர் சில மாதங்களுக்கு முன்னர் சீனித் தொழிற்சாலை தொடர்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம். நாங்கள் சீனி தொழிற்சாலை கொண்டு வரவில்லை என கூறிய நிலையில் நாட்டின் ஜனாதிபதியே உண்மையை கூறிவிட்டார்.

இதன் போது குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் ஒருவர் “வவுனியாவில் அமையப் பெறவுள்ள குறித்த சீனி தொழிற்சாலைக்கு தாய்லாந்து நிறுவனத்திற்கு சீன நிறுவனம் ஒன்று நிதி உதவி வழங்குவதாக கூறப்படுகிறது” அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் அளித்த விந்தன், “தாய்லாந்து நிறுவனம் இயந்திரங்களை பொருத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக மட்டுமே என நான் அறிகின்ற நிலையில் குறித்த தாய்லாந்த நிறுவனத்திற்கு  எங்கிருந்து  பாரிய நிதி வருகின்றது என்பது எனக்கும் தெரியாது.

வவுனியா சீனி தொழிற்சாலை மற்றும் கரும்பு உற்பத்தி சுமார் 14ஆயிரம் ஏக்கரில் இடம்பெறப் போவதாக தெரியவரும் நிலையில் கொழும்பு துறைமுக நகரத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகைக்கு ஒப்பான பாரிய தொகை செலவிடப்படவுள்ளது” என்றார்.