இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி, அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்குமாறு கோரியிருந்தனர்.
வன்னி பிராந்திய தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் T .ஜெயதிலக என்பவரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொங்கல் நிகழ்வுக்கு எதிராக புதன்கிழமை (16) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக பொலிஸார் இந்த தடையுத்தரவை கோரியுள்ளனர்.
அதாவது இந்த பொங்கல் நிகழ்வுகள் வழிபாடுகளிடம் இடம்பெற்றால் இனங்களுக்கு இடையிலே முறுகல் நிலை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் சமாதான குலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து பொலிஸார் இந்த தடை உத்தரவை மேற்படி நபர்களுக்கு எதிராக கோரியிருந்தனர்.
அத்தோடு வவுனியா தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் ஜயதிலக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் தொல்லியல் சின்னங்களுக்கு பாத்திப்பு ஏற்படும் இதற்கு முதல் கடந்த மாதம் 14 ஆம் திகதி அந்த இடத்தில் இந்து மக்களால் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வந்தபோது, தொல்லியல் பிரதேசத்திற்குள் வெவ்வேறு பூஜை பொருட்களை கொண்டுவபாதுகாப்பற்ற உபகரணங்களைக் கொண்டுவந்து அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதைப்போல் இந்த தினத்திலும் அவ்வாறு நடைபெற வாய்ப்புள்ளது. அத்தோடு இந்த இடத்திற்கு பல்வேறு கட்சிக்காரர்கள் வந்து மத ரீதியான கலவரம் ஏற்படக்கூடியதாக உள்ளது எனவும்
அந்த நேரத்தில் ஏதேனும் உயிராபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அதை தடுப்பதற்காக நீதிமன்றத்தின் முன் நிவாரணமான நீதிமன்றத்தின் தடை உத்தரவை கோரி நிற்கின்றோம். புகைப்படங்களின் அடையாளமிட்டு அணைக்கின்றேன்.
இது தொடர்பில் பொலிஸ் மேலதிகமாக புலனாய்வு துறையினரின் மூலம் விடயங்களைத் தேடிப்பார்த்தபோது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் இந்த பொங்கல் நிகழ்வை நடாத்துவதற்கு நாளை (18) தடையுத்தரவு கோரிய சம்பந்தப்பட்ட நபர்கள் குருந்தூர் மலைக்கு வந்தால் அவர்களோடு வருகின்ற குழுவினருடன் குருந்தூர் மலைநோக்கி வருகை தருமாறு பிரச்சாரம் செய்கின்ற மற்றைய தரப்பினர் மற்றும் அவர்களுடன் வரும் குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
மேலும் அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும். இச்சந்தர்ப்பத்தில் பாரதூரமான காயங்கள் ஏற்பட்டால் மிகவும் கடினமான பாதையூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதும் கஸ்ரமாகும்.
ஆகவே கெளரவ மன்று! 2023.08.18ம் திகதி நடைபெறவுள்ள பொங்கல் உற்சவம் மற்றும் அது தொடர்பாக அங்கு வருகின்ற அந்த கட்சிக்காரர்கள் அத்தோடு அதற்காக அங்கு வருவதாக கூறுகின்ற ஏனைய கட்சிக்காரர்களின் வருகையை தடுத்து அன்றைய தினத்திற்கு மாத்திரம் நடைபெறகூடிய மதங்களுக்கு இடையிலான மதக் கலவரத்தை தடுத்துக் கொள்வதற்காக, பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த மாதவழிபாட்டு நிகழ்வுகளை தடை செய்யுமாறு கோருகின்றோம் என பொலிஸார் தமது அறிக்கையின் ஊடாக மன்றில் கோரியிருந்தனர். அத்தோடு
இதில் தொல்பொருள் நினைக்களத்தினரையும். வனஇலாகா திணைக்களத்தினரையும் முறைப்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளுமாறும், மன்றில் கோரியிருந்தனர்.
பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த மன்று போலீசாரின் விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை ஒன்றை ஆக்கியுள்ளது.நீதிமன்றம் வழங்கிய இந்த கட்டளையில் புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்ற கட்டளையை மீறுவதற்கு இந்த நீதிமன்றுக்கு இயலுமை இல்லை.
மேலும் ஒருவருக்கு தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்பது இந்த நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே அது தொடர்பிலான மத அனுட்டானங்களை மேற்கொள்வதும் ஒருவருக்கு உள்ள அடிப்படை உரிமையாகும்.
ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது. குருந்தூர்மலை பிரதேசத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையைத் தடுப்பதற்கு இந்த வழக்கின் கட்சிக்காரர்களாக குறிப்பிடப்படப்படும் விகாரை அதிபதி சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.
அத்தோடு ஒரு மதத்தினரின் மத வழிபாடுகளை இன்னும் ஒரு மதத்தினர தடை செய்வதானது ஒரு பாரதூரமான குற்றம் ஆகும். அவ்வாறு ஒரு மதத்தினரின் மத வழிபாடுகளை தடை செய்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.
அதே போல இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள துரைராசா ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படவுள்ள பொங்கல் வழிப்பாட்டின்போது தொல்லியல் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என்பதனையும் மன்று தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு குற்றச்செயல் புரியப்பட்டால் அந்த குற்றத்தை புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றபொழுது குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இன் ஏற்பாடுகளை பயன்படுத்தி அதனைத் தடை செய்யும் நடைமுறை தேவையற்றது என மன்று கருதுகின்றது.
அவ்வாறானால் ஒவ்வொரு குற்றச்செயல் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு குற்றச்செயல் புரிபவர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். எனவே மேற்படி காரணங்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கோரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1)இன் கீழான தடைக் கட்டளை மீதான விண்ணப்பத்தை மன்று நிராகரித்து கட்டளை ஆக்கியுள்ளது.