யாழ்ப்பாணம்- கோம்பயன் மயானத்தில் முறையாக பராமரிக்கப்படாத சடலக்குழி விவகாரம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கோம்பயன் மயானத்திற்கு அருகாமையில் கடந்த வியாழக்கிழமை சிசு ஒன்றின் தலை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உட்பட மூவரை நேற்றையதினம் (16.08.2023) யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் அவர்கள் முன்னிலையாகினர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் மயானத்தில் குழி ஒன்று வெட்டப்பட்டு அதில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இறந்த சிசுக்களை அடக்கம் செய்து வந்துள்ளனர்.
ஆனால் குறித்த குழி மூடப்படாமல் இருந்ததுடன் ஏற்கனவே குழியில் மனித எச்சங்கள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த வியாழக்கிழமை (10.08.2023) யாழ்ப்பாண நீதவான் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில் அன்று இரவோடு இரவாக யாழ்ப்பாண மாநகர சபை தொழிலாளர்கள் குறித்த குழியினை மண் போட்டு மூடியுள்ளனர் .
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீல உட்பட மூவரை நேற்று (16.08.2023) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாண நீதவான், கோம்பயன் மயானத்தில் உள்ள சடலங்கள் புதைக்கும் குழி ஏன் மூடப்படுவதில்லை என யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சடலக்குழி மூடாமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.