யாழ். மாவட்ட அரச இடமாற்றத்தில் எழுந்த சர்ச்சை

84 0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள்ளக பணி இடமாற்றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் யாழ். மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள பிரதேச செயலகங்களில் ஒரே பிரதேச செயலகத்தில் பல வருடங்களாக தொடர்ச்சியாகக் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பணி இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த இடமாற்றத்தில் சுமார் 170இற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் சுமார் 50இற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் தமது விட மாற்றத்தை எதிர்த்து மேன்முறையீடுகள் செய்த நிலையில் மேன் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த நிலையில் குறித்த இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியதையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் ஐந்து பேரின் இடமாற்றங்களை நிறுத்துவதற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சின் பிரத்தியேக செயலாளரினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே குறித்த ஐந்து பேரினது பெயர்களை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு சிபாரிசு செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சினால் பிரதியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பிரதி தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.