கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வீதி செப்பனிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக கவலையோடு தெரிவிக்கின்றனர்.
வீதி செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்டதால் அவ்விடம் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீதி புனரமைப்பு வேலைத்திட்ட பணிகள் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) அப்பகுதி அரசியல்வாதி ஒருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக பணிகள் யாவும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, குறித்த வீதி தோண்டப்பட்டவாறு பாதியில் திருத்த வேலைகள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்த முடியாமல் தாம் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகஜர்களை அனுப்பியுள்ளனர்.
மேலும், கடந்த காலங்களில் கூட வீதியின் நிர்மாணப் பணிகள் தனி நபர் ஒருவரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே, பிச்சிபிலாவடி வீதியின் புனரமைப்பு பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்குமாறு பிரதேசவாசிகள் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.