குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்து உண்டு வருகின்றன.
சில வேளை அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதுடன் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்கின்றன.
மேற்படி, பகுதியில் தினமும் காரைதீவு, கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்றன.
இதனால் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அம்பாறை பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் அநேகமானவை மேற்குறித்த இடத்திற்கே கொட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த காலங்களில் இப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட இரண்டு யானைகள் உயிரிழந்திருந்தன.
கடந்த 8 ஆண்டுகளில் 20 யானைகள் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை சாப்பிட்டு இறந்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் திறந்தவெளி குப்பை கிடங்கில் பிளாஸ்டிக், பொலிதீன் கழிவுகள் தேங்குவதாலும் அப்பகுதியில் அதிகளவில் யானைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த யானைகளை பரிசோதித்த போது குப்பை மேட்டில் இருந்து பெருமளவிலான அழியாத பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கியுள்ளதாகவும் யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு எதுவும் அங்கு தெளிவாகத் தெரியவில்லை என வனவிலங்கு கால்நடை வைத்தியர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.