ஜனாதிபதியின் நேரடி தலையீட்டின் கீழ் புதிய காணி கொள்கை-ஹரின்

72 0

நாட்டின் சகல பகுதிகளிலும் காணி பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாதவையாகக் காணப்படுகின்றன.

எனவே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டின் கீழ் புதிய காணி கொள்கை மற்றும் சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டின் கீழ் காணி தொடர்பான புதிய கொள்கை மற்றும் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஓரிரு வாரங்களுக்குள் அவை அறிமுகப்படுத்தப்படும்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம் என பலதரப்பட்ட நிறுவனங்களிடம் காணி தொடர்பான அதிகாரம் காணப்படுகிறது.

எனினும் இதில் இறுதியாக நானே கையெழுத்திட வேண்டும்.

ஆனால் எந்தவகையிலும் காணிகளை விடுவிப்பதற்கோ அல்லது சுவீகரிப்பதற்கோ தற்போது எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

காரணம் மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் தமக்கேற்றவாறு ஒவ்வொருவருக்கும் காணிகளை பகிர்ந்தளிக்கத் தொடங்கின.

எனவே தான் யாரையும் இவ்விடயத்தில் தலையிட வேண்டாம் என்று ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்படவுள்ள காணி தொடர்பான புதிய கொள்கை மற்றும் சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரத்துடன் காணிகள் வழங்கப்படும் என்று நான் உறுதியளிக்கின்றேன்.

அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2.2 மில்லியன் மக்களுக்கும் இதனை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

நீண்ட காலமாகக் காணப்படும் சிறு வழக்குகள் தொடர்பில் புதிய கொள்கையின் ஊடாக சட்ட ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி அந்த அனைத்து பிணக்குகளையும் தீர்த்து அனைத்து பிரஜைகளையும் சொந்த நிலமுடையவர்களாக்குவோம்.

அதேபோன்று அபிவிருத்திகளுக்கான காணிகளை ஒதுக்கும் வேலைத்திட்டங்களும் ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் பின்னர் நாட்டின் பாரிய முதலீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுற்றுலாத்துறையின் ஊடாக மாத்திரம் நாட்டை அபிவிருத்தியடைச் செய்ய முடியும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையாகும். காரணம் கடந்த ஆண்டு சுற்றுலாத்துறை முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்து, ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் தொழில்களை இழக்கும் நிலைமை காணப்பட்டது.

ஆனால் இன்று ஒரு அதிசயத்தைப் போன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

பாரிய சுற்றுலாப்பயணிகளை நிர்வகிக்கும் வளம் எம்மிடம் இல்லாதது பாரிய குறைபாடாகும்.

எனவே பயன்பாடின்றி காணப்படும் அதி சொகுசு வீடுகள், மாடிக் குடியிருப்புக்கள், தனி வீடுகள் உள்ளவர்கள் தங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்து அவற்றை சுற்றுலாத்துறைக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும், நாட்டு மக்களின் உயர் வருமானத்துக்கும் வழி கிடைக்கும்.

செப்டம்பரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சுற்றுலாத்துறையின் முதற்கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சிறு ஆர்ப்பாட்டங்களை மையமாகக் கொண்டு அந்நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கின்றமை கவலைக்குரியது.

உண்மையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் பிரசாரங்களை முன்னெடுப்பது வரலாற்றில் என்றுமே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாத இரு வேட்பாளர்களும் அவர்களது குழுக்களுமே.

எனவே அவ்வாறானவர்களின் போலி பிரசாரங்களை நம்பி பயண எச்சரிக்கைகளை விடுக்காமலிருப்பது தொடர்பில் அமெரிக்க தூதுவரை நேரில் சந்தித்து பேசவுள்ளேன்.