விளையாட்டுகள் தொடர்பில் ஏற்படுகின்ற குற்றங்களைத் தடுப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

111 0

விளையாட்டுகள் தொடர்பில் ஏற்படுகின்ற குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணை பிரிவொன்றை நியமித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று விளையாட்டு  மற்றும்  இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை பிரிவு கடந்த  2023 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் கையொப்பத்துடன் வௌியான அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் மற்றும் தலைவராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயனாத் வணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுகள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் 21 ஆவது பிரிவுக்கு அமைவாக, அந்த சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 3 ஆண்டு காலப்பகுதிக்காக இந்த விசேட விசாரணை  பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதைய காலக்கட்டத்தில், ‍குறிப்பிடத்தக்க விளையாட்டுகளில்,ஊழல் மோசடி, போட்டி நிர்ணயம், மோதல்கள், வீர, வீரராங்கனைகள் தெரிவில் பாரபட்சம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அண்மைக் காலங்களில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு விசேட விசாரணை பிரிவு நியமிக்கப்பட்டள்ளமை ஊடாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.