முல்லைத்தீவு அம்பலப்பெருமாள் குளத்தினை முழுமையான புனரமைப்பிற்கு உட்படுத்துமாறு இக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் 110 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. முழுமையாக விவசாயத்தினை நம்பியே இக்குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் இக்கிராமத்தின் குளம் புனரமைக்கப்படாது காணப்படுகின்றது. குளத்தின் அணைக்கட்டு பல இடங்களில் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் கூட்டங்களை நடாத்த வருகின்ற அதிகாரிகளிடம் குளத்தினை புனரமைத்து தாருங்கள் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் சிறிய வேலைகள் குளத்தில் இடம் பெற்றிருந்தாலும் முழுமையான வேலைகளை முன்னெடுப்பதற்கு நிதி கிடைக்கவில்லை என அதிகாரிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளக் கூடிய நிலைமை காணப்பட்டாலும் தற்போது குளம் புனரமைக்கப்படாததன் காரணமாக 450 ஏக்கர் வரையான நிலப்பரப்பிலேயே விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது.
குளத்தினை புனரமைத்து முழுமையான விவசாய நடவடிக்கைக்கு அதிகாரிகள் உதவ வேண்டும் என இக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.