சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள குருந்தூர்மலை

122 0

முல்லைத்தீவு -குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழாவில் அனைத்து மக்களும் அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு குருந்தூர்மலை ஆதிசிவன்ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

குருந்தூர் மலையில் எதிர்வரும் 18.08.2023 அன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (16.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பரிபாலன சபை தலைவர் து.விக்னேஸ்வரன், ஆலய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என்று முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு பகுதியிலே பேசுபொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை  ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம், சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.

சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள குருந்தூர்மலை: க.விஜிந்தன் (Photos) | Mullaitivu Kurundurmalai Issue

 

குறித்த ஆலயத்தின் வரலாறு அதாவது, எம் தமிழ் இந்துக்கள் இந்த ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழைமையானது.

இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந்நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடின்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள்.அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாகக் கூறியிருக்கின்றது.

 

பூரண ஒத்துழைப்பு

 

அதாவது குருந்தூர்மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

 

எனவே, நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வைத் தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மிகப் பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.

எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டுத் தன்மைகளைப் பேணுவதற்காகச் சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு மட்டுமல்லாது, இந்த மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளதாவது, தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருக்கின்ற குருந்தூர்மலை தமிழர்களுடைய பாரம்பரிய ஒரு பிரதேசம்.

தொன்று தொட்டு அங்கே வாழும் தமிழ் மக்கள் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திலே பொங்கலை மேற்கொள்ளும் போது இந்துக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொள்வது ஆதி காலம் தொட்டு ஒரு நிகழ்வாக இருந்து கொண்டிருக்கின்றது.

கடந்த சில காலங்களாக அந்த பிரதேசங்களில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மக்களால் ஆக்கிரமிப்பிற்கு உரிய நோக்கத்துடன் மேற்கொள்கின்ற இந்த விடயம் வேதனைக்குரியதாக விடயமாகக் கருதப்படுகின்றது.

குறித்த ஆலயத்திலே ஒரு பொங்கல் நிகழ்வை மேற்கொள்வதற்காக ஆலய நிர்வாகம் மேற்கொண்டிருக்கின்ற அந்த முயற்சிக்கு வன்னியிலே வாழ்கின்ற மக்கள் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் பேசும் மக்கள் அத்தனை பேரும் குறித்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறித்த பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காகப் பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து அவற்றைக் குழப்புகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரத்தில் ஆலய பரிபாலன சபையினர் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இது எங்களுடைய தாயக பிரதேசம்.

இப்பிரதேசத்தைப் பாதுகாப்பது எங்களுடைய கடமை. ஆகவே ஆலய பரிபாலன சபையினர் அரசியலிலோ அல்லது மத விடயத்திலோ சம்பந்தப்படாதவர்கள்.

நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து கடமைகளை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்ள்ளார்.

GalleryGalleryGalleryGallery