ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்தனர்.
ஆனால், அவர்கள் கூறியபடி தலிபான்களின் ஆட்சி நடைபெறவில்லை. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தலிபான்கள் நேற்று (செவ்வாய்கிழமை) தேசிய விடுமுறையாக அறிவித்தனர். தலிபான்கள் காபூல் வீதிகளில் ஊர்வலமாக சென்று கைவிடப்பட்ட அமெரிக்க தூதரக கட்டிடத்திற்கு அருகிலுள்ள மசூத் சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள். சிலர் தங்கள் ஆயுதங்களை ஏந்திச் சென்றனர். மற்றவர்கள் கீதங்கள் முழங்க, இளம் சிறுவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகடனம் பொறிக்கப்பட்ட இயக்கத்தின் வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றனர்.
இதுகுறித்து தலிபான்கள் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதற்கு வழி வகுக்கும் இந்த வெற்றி பாராட்டுக்குறியது. காபூலைக் கைப்பற்றியதன் மூலம், பெருமைமிக்க தேசமான ஆப்கானிஸ்தானை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுள்ளது.
எந்தவொரு ஆக்கிரமிப்பாளரும் எங்கள் நாட்டின் சுதந்திரத்தை அச்சுறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறும்போது, இந்த நாள் ஆப்கானியர்களுக்கு மரியாதையும் பெருமையும் நிறைந்தது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஆப்கானியர்கள் தங்கள் நாடு, சுதந்திரம், அரசாங்கம் மற்றும் விருப்பத்தை மீண்டும் பெற முடிந்தது என்றார்.